×

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய 5 பேர் வல்லுநர் குழு நியமனம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கடலூர், மார்ச் 7: கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆராய 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடலூரில் 1985ம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் அங்கு செயல்படுகின்றன. சிப்காட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொடர்ச்சியாக பல நோய்கள் வந்ததையடுத்து அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து 2014ல் பெற்ற தகவலில் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மிக மோசமாக மாசடைந்தது தெரிய வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் கடலூரைச் சேர்ந்த மீனவர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியும், தொழிற்பேட்டைக்கு உள்ளேயும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் குரோமியம், காட்மியம், மெர்குரி போன்றவை அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க தடை இருந்ததாலும், கடந்த 5 ஆண்டுகள் பசுமைத் தீர்ப்பாயம் அளித்த பல்வேறு உத்தரவுகளாலும் சிப்காட் தொழிற்பேட்டையில் சில மாசு கட்டுப்பாடுகளை தொழிற்சாலைகள் மேற்கொண்டன. இதனைக் காரணம் காட்டி சிப்காட் நிறுவனமும், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளின் சங்கமும் அப்பகுதியில் மேற்கொண்டு எந்த ஆய்வையும் அரசு மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் பசுமைத் தீர்ப்பாயத்தில் கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கில் நேற்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத் தீர்ப்பில் சிப்காட் மற்றும் தொழிற்சாலை சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்து சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை விரிவாக ஆய்வுசெய்ய வல்லுனர் குழுவை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி, வேதியியல் வல்லுநர், தொழிற்சாலை மாசு குறித்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெறுவார்கள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இக்குழுவானது சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விரிவான ஆய்வை மேற்கொண்டு நிலத்தடி நீர் மற்றும் காற்று எந்த அளவிற்கு கன உலோகங்கள் போன்ற ரசாயனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வையும், இப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய செயல் திட்டத்தையும், மாசுபாட்டிற்கு காரணமாக இருந்த தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து ஆறு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சிப்காட் தொழிற்பேட்டை கடலூரில் துவங்குவதற்கு முன்பாக அப்பகுதியில் இருந்த உயிரிழப்பு எண்ணிக்கைக்கும், சிப்காட் தொழிற்பேட்டை செயல்படத் தொடங்கிய பின்னர் அப்பகுதியில் இருந்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Green Tribunal ,Cadalur Chipkat Workforce ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...