மேற்கு வங்க வாலிபர் சாவில் திடீர் திருப்பம் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி புதுவை அருகே பரபரப்பு

காலாப்பட்டு, மார்ச் 7: புதுச்சேரி அருகே மேற்கு வங்க வாலிபர் சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை மனைவியே தீர்த்து கட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பை பங்களாமேடு பகுதியில் வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 50 பேர் குடும்பத்துடன் தங்கி பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மன்சூர் மகன் இலியாஸ் (30) என்பவர், அங்கு தங்கியிருந்து குப்பை பொறுக்கி விற்று வந்துள்ளார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை இலியாஸ் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன், இலியாசுக்கும், அதே பகுதியில் வசித்த டெல்லியை சேர்ந்த ரீனா (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இலியாஸ் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த ரீனாவின் பெற்றோர், அவரது உடலை இறுதி சடங்கு ெசய்வதற்காக அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்றபோது, அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இலியாசின் சாவில் மர்மம் உள்ளதால், உடலை இங்கு புதைக்கக்கூடாது என்றனர். தொடர்ந்து இலியாஸ் உடலை வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அங்குள்ள மக்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, இறந்தவர் உடலில் காயம் இருப்பதாக தெரிவித்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து இலியாஸ் உடலை கைப்பற்றி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவில், இலியாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இலியாசின் மனைவி ரீனாவிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.ரீனாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்துக்கு பிறகும் ரீனா, 2 வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை இலியாஸ் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரீனா, 2 கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து இலியாசை கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, ரீனா மற்றும் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலர்கள் அசோக் (32), சரண் என்ற சரண்ராஜ் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>