×

கார், வேன்களில் கட்சிக்கொடி தேர்தல் ஆணையம் அலட்சியம்

தேனி, மார்ச் 7 :  கார்,வேன், டூவீலர்களில் கட்சிக் கொடி கட்டிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை இல்லாமல் தேர்தல் ஆணையம் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப். 6ம்தேதி நடக்க உள்ளது. இத்தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த மாதம் 26ம்தேதி வெளியானது. தேர்தல் தேதி வெளியான நேரம் முதலாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகர,பேரூர் நகர்களில் அரசுக்கு சொந்தமான கட்டடங்களிலோ, தனியார் கட்டிடங்களிலோ தேர்தல் சின்னங்கள் வரையக்கூடாது. பிளக்ஸ் பேனர் அமைக்கக் கூடாது. தனியார் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தேனி நகரில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களின் முன்பாக  வைக்கப்பட்ட பெயர்பலகை, பிளக்ஸ் பேனர்களை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது.   

வாகனங்களில் அரசியல் கட்சியினர் தாங்கள் சார்ந்த கட்சிக் கொடிகளை கட்டிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிச் செல்ல தேர்தல் ஆணைத்தில் அனுமதி பெற வேண்டிய நிலையில் அனுமதி இல்லாமல் வாகனங்கள் இயங்கி வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு சென்றால் இதற்கான அனுமதி வழங்குவது பற்றி முறையான வழிகாட்டுதல் இல்லை எனக்கூறி தனியார் வாகன உரிமையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட தேர்தல் பிரிவினர் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Election Commission ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...