×

சென்னையில் தர்ணாவில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு 8 நாள் சம்பளம் பிடித்தம்

மதுரை, மார்ச் 7: கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் ெசய்யப்பட்டதால், அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு போராட்டத்தால், பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.7.700ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊதிய உயர்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.

மேலும், வாரத்தில் 2 நாட்களாக இருந்த பணி நாட்களை மூன்றரை நாட்களாக மாற்றியமைத்தது. ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் கேட்டு சென்னையில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்டவர்களின் சம்பளத்தை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருவூலத்துறைக்கு பள்ளிக்கு கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. இதன்படி பகுதி நேர ஆசிரியர்களின் 8 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்து, அந்த நிதியை மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்த தலைமையாசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்.
* இதுகுறித்து மதுரை பகுதி நேர ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறோம். எங்களின் உண்மையான கோரிக்கையை வலியுறுத்தி தான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். மிக குறைவான சம்பளத்தில் போராட்டத்தை காரணம் காட்டி பிடித்தம் செய்வது சரியானது இல்லை. எனவே, பிடித்தம் செய்த சம்பளத்தை மீண்டும் தர வேண்டும்’’ என்றனர்.

Tags : Tarna ,Chennai ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...