×

உரிய நேரத்துக்கு வராததைக் கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்: கன்னிவாடி அருகே பரபரப்பு

 

ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி அருகே, பள்ளி நேரத்திற்கு வராததை கண்டித்து அரசு பஸ்சை பொதுமக்களுடன் சேர்ந்து மாணவ, மாணவியர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின் மின்வெட்டு, அரசு பஸ் இயக்கம் குறைப்பு, குடிநீர் விநியோகம் இல்லாதது என பல்வேறு அடிப்படை வசதிக்காக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல, அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடியால் எந்த பயனும் இல்லை என விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல்லில் இருந்து பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, வெல்லம்பட்டி வழியாக கன்னிவாடிக்கு தினசரி 5 முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தவெக ஆட்சி அமைந்த பின்னர் இதில் சில டிரிப்கள் குறைக்கப்பட்டன. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பஸ் இல்லாமல் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வெல்லம்பட்டி வந்த அரசு பஸ்சை பெற்றோர்களுடன் சேர்ந்து மாணவ, மாணவியர் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டர் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அரை மணிநேரம் சிறைபிடித்த பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திண்டுக்கல்லில் இருந்து இப்பகுதிக்கு வரும் பஸ்சை சிறப்பு இயக்கத்திற்காக வேறு பகுதிக்கு அனுப்புகின்றனர். மேலும், நேர பிரச்னையை கருத்தில் கொண்டு கோனூர், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி வழியாக வரும் பஸ் சேவையை நிறுத்தியுள்ளனர்.

இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து திண்டுக்கல் 3வது கிளை மேலாளர், பஸ்நிலைய பொறுப்பு அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் தான் பஸ்சை சிறைபிடித்தோம்’ என்றனர்.

Tags : Kanniwadi ,Tamil Nadu ,Government of Dweka ,Chief Minister ,Vijay ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...