வைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் மண்டல அலுவலர்கள் கூட்டம்

வைகுண்டம், மார்ச் 7: வைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான ஜீவரேகா தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வைகுண்டம் தாசில்தாருமான கோபாலகிருஷ்ணன், சமூக நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், சாத்தான்குளம் தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள் எங்கு எங்கு உள்ளன என்பதை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ம் தேதிக்கு முன்னர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிகளை தெளிவாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் பேசுகையில், ‘சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று முகக் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக வாக்குச்சாவடி மையங்களில் அமல்படுத்த வேண்டும். வாக்காளர்கள் யாரேனும் முகக் கவசங்கள் இன்றி வாக்குப் பதிவு செய்ய  வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. வாக்குப்பதிவு மையங்களான பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் தொற்று உபகரணங்களை வீசி விடக்கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் முகக் கவசங்கள் உள்ளிட்ட நோய் தடுப்பு உபகரணங்களை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார். இதில் வைகுண்டம் தேர்தல் துணை தாசில்தார் சிவக்குமார் மற்றும் வேளாண்மை துறை, ஊரக துறை, நில அளவை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக துறை சார்ந்த தேர்தல் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>