×

சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

தூத்துக்குடி, மார்ச் 7: சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே பதிவான வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பதிவாகும் வகையில் மக்களிடத்தில் விழிப்புணர்வு பணிகளை செய்திடவேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் கடந்த கால தேர்தல்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் பதிவாகும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மக்களிடத்தில் சிறப்பாக மேற்கொள்ளவேண்டும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் வாக்குபதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்திடவேண்டும். தேர்தலின்போது, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முககவசம் அணிந்து பணியாற்றிட வேண்டும். மேலும் தேர்தலுக்கு தேவையான கையுறைகள் மற்றும் தேவையான பொருட்களை பெற்று வாக்குசாவடிகளுக்கு முறையாக அனுப்பி வைக்கவேண்டும்.

செலவு கணக்கு கண்காணிப்பு குழுவினர் பிரசாரம் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் அதற்கான செலவுகள் குறித்து கணக்கீடு செய்திடவேண்டும். வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை மேற்கொள்வதற்கு என தனியாக வங்கி கணக்கு துவங்கி அதன் மூலமே செலவு மேற்கொள்ளவேண்டும். செய்யப்படும் செலவுகள் குறித்து செலவு கணக்கு கண்காணிப்பு குழுவினருக்கு தகவல்களை தெரிவிக்கவேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை உடனுக்குடன் அந்தந்த பகுதி பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல்களை தரவேண்டும். புகார்கள் குறித்து நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும். அனைத்து கண்காணிப்புகுழு முதன்மை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக தேர்தல் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறித்து மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி முன்பு வரையப்பட்டிருந்த ரங்கோலி கோலங்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார். இதில், சப்-கலெக்டர் சிம்ரன்ஜீத் கலோன், மாநகராட்சி கமிஷனர் சரண்யாஅரி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேர்தல் தாசில்தார் ரகு மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Assembly elections ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா