×

மர்ம கும்பலின் கல்வீச்சு தாக்குதலில் தப்பிக்க துப்பாக்கியை தவறாக கையாண்ட பாஜக பெண் நிர்வாகி பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்

 

ஜபல்பூர்: வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலின் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாஜக பெண் நிர்வாகி உயிரிழந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரஞ்சி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சங்கீதா ரஜக் (38). கடந்த மே 28ம் தேதி இவருடைய வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்கள் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அந்த கும்பல் மீண்டும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சங்கீதாவின் வீட்டிற்கு வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் கணவர் மற்றும் மைத்துனர் வீட்டின் பால்கனிக்கு ஓடிச் சென்றனர். அப்போது தற்காப்பிற்காக தனது மைத்துனர் புஷ்பேந்திர ரஜக் பெயரில் இருந்த 12-போர் ரக துப்பாக்கியை அவர்களிடம் கொடுக்க சங்கீதா முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சங்கீதாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : BJP ,Madhya Pradesh ,Jabalpur ,Sangeetha Rajak ,Jabalpur Ranchi, Madhya Pradesh ,
× RELATED திரிணாமுல் காங்கிரசில் அரசியல் மோதல்;...