- திரிணாமூல் காங்கிரஸ்
- தில்லி
- அமித் ஷா
- யூசுப் பதான்
- புது தில்லி
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- பாஜக
- தேசிய ஜனநாயக கூட்டணி
- மேற்கு வங்க சட்டமன்றம்
- முதல் அமைச்சர்…
புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டசபையில் 58 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொறடா காகோலி கோஷ் தஸ்திதர் தலைமையில், 28 மக்களவை எம்பிக்களில் 20 பேர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் அளித்தனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலம் இந்த அதிருப்தி எம்பிக்களிடம் உள்ளதால், அவர்கள் எம்பி பதவியை இழக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஹரம்பூர் தொகுதி எம்பியுமான யூசுப் பதான், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை ஏற்று டெல்லி சென்றதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘யூசுப் பதான், அமித் ஷா அழைத்தவுடன் நீங்கள் டெல்லிக்கு ஓடுகிறீர்களா? கொஞ்சம் தைரியமாக இருங்கள். நீங்கள் இந்தியாவிற்காக விளையாடியவர். நமது மாவட்ட மக்கள் உங்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். உங்களுக்கு கொஞ்சம் முதுகெலும்பும் வெட்கமும் இருக்கட்டும்’ என்று அவர் சாடியுள்ளார்.
