×

தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றார்: கப்பல் கட்டுமான நிலையத்தை பார்வையிட்டார்

 

சென்னை: தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்று கப்பல் கட்டுமான நிலையத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு இந்தியாவின் முக்கிய உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். தற்போது தமிழகத்தில் புதிய கப்பல் கட்டுமானத் தளங்களை அமைப்பது உள்ளிட்ட கப்பல் தொழில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு கடந்த 8ம் தேதி தென்கொரியாவில் உல்சானில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தை பார்வையிட்டு, கப்பல் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்புகளை ஆய்வு செய்து, பரஸ்பர ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளனர்.

ஹூண்டாய் ஹெவி இன்டஸ்ட்ரீஸின் ஹோல்டிங் நிறுவனமான எச்.டி. ஹூண்டாய், கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசுடன் புதிய கப்பல் கட்டுமான தளம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மேலும், இந்த ஆண்டு ஏப்ரலில் அந்த ஒத்துழைப்பை மத்திய அரசின் மட்டத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள தமிழ்நாடு, வாகன உற்பத்தி, மின்னணு, கனரக தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில் தளங்களும், துறைமுக மற்றும் போக்குவரத்து வசதிகளும் கொண்ட முக்கிய உற்பத்தி மையமாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில், தமிழகம் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும், உலகளாவிய முதலீடுகளை ஈர்த்தலும் முக்கிய கொள்கை இலக்குகளாக கொண்டு செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் புதிய கப்பல் கட்டுமான தளத்தை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கல், துறைமுக மற்றும் பின்னணி அடிப்படை வசதிகள் உருவாக்கம், வரி சலுகைகள், நிதி உதவிகள் உள்ளிட்ட சிறப்பு ஊக்கத்தொகை திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது தயாரித்து வருவதாக அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமைச்சர் கீர்த்தனா உல்சான் கப்பல் கட்டுமான தளத்தை பார்வையிட்டு, கப்பல் தொழிலை முக்கிய துறையாக மேம்படுத்த தமிழ்நாடு அரசின் உறுதியான விருப்பத்தை மீண்டும் நிரூபிக்கிறது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மேலும் அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றுள்ள அமைச்சர் கீர்த்தனா, ஹூன்டாய் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அப்போது, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.40 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Industries ,Minister ,Keerthana ,South Korea ,Chennai ,India ,
× RELATED தமிழ்நாட்டில் நெல்லை, கோவை,...