சென்னை: அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். 21 பேர் வருத்தம் தெரிவித்த கடிதங்களை எடப்பாடி பழனிசாமி அனுப்பி இருந்தார். அதை பரிசீலித்து தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏ-க்களின் மன்னிப்பு ஏற்கப்பட்டது என்று சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “21 பேர் மீது நடவடிக்கை வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தார். எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்கப்படாத 21 பேரில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கரும் உள்ளனர். 4 எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது.
அதிமுக குழு தலைவர், கொறடா தொடர்பான மனுவை இன்னும் பரிசீலிக்கவில்லை. ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 பேரும் தவெகவுக்கு வாக்களித்தனர்.
