சென்னை: ஒருபக்கம் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மறுபக்கம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு 9-லிருந்து, 4-ஆக குறைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு ஆங்காங்கே இன்னு தட்டுப்பாடு காணப்படுகிறது. அதே நேரம் வர்த்தக சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் என பல்வேறு உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது மக்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் புதிய அரசோ எதை கேட்டாலும் முந்தைய திமுக அரசை கைகாட்டி, கஜானா காலி என்று பழிபோட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி என்பது தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பின்னர் தான், தவெக சாத்தியமற்ற ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்தது.
இதற்கு முக்கியமான சான்று மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர தொகை ரூ.2500-ஆக அதிகரிக்கப்படும், மாநிலம் முழுவதும் பெண்கள் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் செய்யலாம் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் விழிபிதுங்கி நிற்பது. தவெக அரசு அமைந்தவுடனே ரூ.2500-ஐ கூட விட்டு விட்டு, எப்போது எங்களுக்கு 6 இலவச சிலிண்டர் கிடைக்கும் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் வாக்குறுதி, தற்போதைய பொருளாதாரச் சூழலில், எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையாக இருக்கும் சூழலில் சாத்தியமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக உள்ளது.
தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தற்போதைய வீட்டு உபயோக சிலிண்டர் விலை (சுமார் ரூ.957.50) அடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்க ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.5,745 செலவாகும். இந்தவிலையின் படி கணக்கிட்டால் கூட, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஆண்டுக்குச் சுமார் ரூ.12,000 கோடி முதல் ரூ.12,408 கோடி வரை கூடுதல் நிதி தேவைப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதே போல எரிவாயு விநியோகம் என்பது மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது ஒன்று. எனவே, மாநில அரசு நேரடியாக சிலிண்டர்களை வழங்க முடியாது; மாறாக, அதன் முழுத் தொகையையும் மானியமாக எண்ணெய் நிறுவனங்களுக்கோ அல்லது மக்களின் வங்கிக் கணக்கிற்கோ செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள்.
தற்போதைய சர்வதேச சந்தை விலை உயர்வு மற்றும் தமிழக அரசின் கடன் சுமையைக் கணக்கில் கொள்ளும்போது, கடுமையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் தகுதி அடிப்படையிலான பயனாளிகள் தேர்வு முறை இல்லாமல் இதனை முழுமையாகச் செயல்படுத்துவது மிக கடினமான ஒன்று.
இது போக தேர்தல் நேரத்தில் தவெக அறிவித்த நிதி சார்ந்த வாக்குறுதிகள் அனைத்தையுமே நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உள்கட்டமைப்பு மற்றும் மூலதனச் செலவுகளைக் குறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது மாநில நிதி நிலைக்குப் பெரும் சவாலாகும். மொத்தத்தில் எப்படியும் ஆட்சிக்கு வர போவதில்லை என்று நினைத்து இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக அரசு, தற்போது கொடுத்ததில் எந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் முழித்து வருகிறது.
