×

அதிராம்பட்டினம் பகுதியில் கழுதை பால் விற்பனை படுஜோர்

அதிராம்பட்டினம், மார்ச் 6: அதிராம்பட்டினம் பகுதியில் கழுதை பால் விற்பனை படுஜோராக நடக்கிறது. 50 மில்லி ரூ.350க்கு வழங்கப்படுகிறது. அதிராம்பட்டினம் பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்தவர்கள் கழுதைகளுடன் வந்து முகாமிட்டுள்ளனர். இவர்களிடம் ஆண், பெண், பெரிய கழுதைகள் முதல் சிறிய கழுதைகள் வரை உள்ளன. இவர்கள் அதிராம்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கழுதை பாலின் (50 மில்லி) விலை ரூ.350, மற்றும் ஒரு பாலடை ரூ.50, என விற்கின்றனர். இந்த கழுதை பாலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். கழுதை பால் அருந்தினால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா, சிரங்கு, புண், மஞ்சள் காமாலை, சிறு குழந்தைகள் கல், மண் சாப்பிடுவதால் ஏற்படும் உபாதைகள், வெள்ளை, வெட்டை, சோர்வு, சோகை உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் பிறந்து 3 நாளான குழந்தைகள் முதல் 86 வயது முதியவர் வரை கழுதை பால் சாப்பிடலாம் என்கின்றனர்.

இதுகுறித்து கழுதை பால் வியாபாரியான தொழுதூர் கருப்பையா கூறுகையில், கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது. நாங்கள் பரம்பரை பரம்பரையாக இதை தொழிலாக செய்து வருகிறோம். நாங்கள் கால்நடையாக ஒவ்வொரு பகுதியாக சென்று 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை முகாமிட்டு கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் கழுதைப்பால் குடித்தால் ஜீரண சக்தி குறைபாடு, மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் வராது. சிறிய குழந்தைகள் ஒரு சங்கு, பெரியவர்கள் என்றால் இரண்டு சங்கு பால் கொடுக்க வேண்டும். பாலில் கலப்படம் இல்லாமல் பொதுமக்கள் கண்முன்னேயே கரந்து நுரையோடு நேரடியாக சூடு மாறாமல் தருகிறோம். இந்த தொழில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த தொழிலை செய்து வருகிறோம். பசு மாடுகளை எவ்வாறு கண்காணிப்போமோ, அதேபோல குளிப்பாட்டி சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துள்ளோம். கால்நடை மருத்துவரிடம் காட்டி கழுதைக்கு நோய்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம் என்றார்.

Tags : Padujor ,Adirampattinam ,
× RELATED உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்