தா.பழூர் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையால் பொதுமக்கள் அவதி

தா.பழூர், மார்ச் 6: தா.பழூர் அருகே தார் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்திற்கு செல்லும் பொன்னாற்று கரை தார் சாலை. இந்த சாலை மதனத்தூர் காலனி தெரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பொன்னாற்று கரையின் ஓரமாக சென்று அருள்மொழி கிராமத்தை அடைகிறது. இந்த சாலை சுமார் 5 வருடங்களுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையை பயன்படுத்தி அருள்மொழி, கிராமத்தில் இருந்து புரந்தான், முத்துவாஞ்சேரி, விக்கிரமங்கலம் வரை பொதுமக்கள் சென்று வர ஏதுவாக உள்ளது.

மேலும் அருள்மொழி கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி கும்பகோணம் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலையை சுற்றி வரும் போது காரைக்குறிச்சி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து தா.பழூர் மதனத்தூர் சாலையை பயன்படுத்தி வரவேண்டி உள்ளது. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சுமார் 4 இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

மேலும் இந்த பொன்னாற்று கரை தார் சாலை வழியாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல இந்த சாலை பெரிதும் பயன்படுகிறது. இந்த சாலை வழியாக விவசாய நிலங்களுக்கு விதை, உரம், எடுத்து செல்வதற்க்கும் அறுவடை செய்யும் நெல் மணிகளை விற்பனை செய்ய வெளி கொணர்வதற்கும் இந்த சாலை பெரிதும் பயன்படுகிறது. தற்போது இந்த சாலை கப்பி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் அடிக்கடி கல் குத்தி வாகனங்கள் பஞ்சர் ஆகி விடுகின்றது. ஆகையால் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும் இந்த சாலையை புதுப்பித்து தார் சாலை அமைக்க வேண்டும் என பாதசாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>