திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாமல் அலட்சியம் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாமல் திணறல்

திருவண்ணாமலை, மார்ச் 6: திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி இன்னும் பொருத்தாததால், வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சுழற்சி முறையில் பணியாற்ற தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 24 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் நிலையிலான வருவாய்த்துறை அலுவலர், ஒரு எஸ்ஐ, இரண்டு போலீசார் மற்றும் ஒரு வீடியோகிராபர் ஆகியோர் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், பறக்கும் படை வாகனங்கள் மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் பயணிக்கிறதா, எந்த இடத்தில் தற்போது வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதற்காக, ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என தெரிவித்தது. இந்த கருவி பொருத்துவதால், கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழியாக கிடைக்கும் புகார்களை, விதிமீறல் நடைபெறும் இடத்துக்கு மிக அருகே எந்த வாகனம் இருக்கிறது என கண்டறிந்து அந்த குழுவிடம் தகவல் அளிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டு ஒரு வாரமாகிவிட்ட நிலையில், இதுவரை மாவட்டத்தில் உள்ள எந்த வாகனத்திலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தவில்லை. அதனால், அந்த வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும், ஒரு வாகனத்துக்கு 24 மணி நேரத்துக்கு 5 லிட்டர் டீசல் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும், அதற்கான தொகையையும் வழங்கவில்லை. பணியில் ஈடுபடும் ஊழியர்களே தங்கள் சொந்த செலவில் டீசல் நிரப்பிக்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்து வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள் அனைத்தும், சாலையோரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புளிய மர நிழலில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கண்துடைப்புக்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Related Stories:

>