×

மயிலாடும்பாறை கிராமத்தில் ஆட்டு சந்தைக்கு இடம் தேர்வு

வருசநாடு, மார்ச் 6: மயிலாடும்பாறை கிராமத்தில் ஆட்டு வாரச்சந்தை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடும்பாறை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள், தாங்களே நேரடியாக தேனி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், கால்நடை  வளர்ப்போர் ஆடுகளுக்கு வாரச்சந்தை அமைப்பது சம்பந்தமாக, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு  அளித்திருந்தனர். இதையேற்று மயிலாடும்பாறை கிராமத்தில் பொன்னன்படுகை சாலையில் ஆடுகளுக்கு புதிய வாரச்சந்தை இடம் தேர்வு செய்து செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.

இனி வரும் 2 நாட்களில் பணிகள் நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்து கிராம பொதுமக்கள் தாங்களே விற்பனை செய்து கொள்ளலாம் என்றனர். இதனால், கால்நடை வளர்ப்போர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இடைத்தரகர்களின் இடையூறு ஏற்படாது அதிக லாபம் இருக்கும் எனவும் கால்நடை வளர்ப்போர் கூறியுள்ளனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...