×

நாசரேத், காயல்பட்டினத்தில் கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது

நாசரேத், மார்ச் 6: நாசரேத், காயல்பட்டினத்தில் கடைகளில் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மீட்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் 5ம் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (71). மர்காஷிஸ் சாலையில் ரெடிமேட்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பிப்.19ம் தேதி வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 6 தலையணைகளை கேட்டுள்ளார். கடையில் 4 தலையணைகளே இருந்ததால் அவைகளை அந்த வாலிபரிடம் கொடுத்த தர்மராஜ், மீதி 2 தலையணைகளை அருகில் உள்ள வீட்டிலிருந்து எடுத்து வருவதாகவும், அதுவரை கடையில் காத்திருக்குமாறும் கூறி விட்டு சென்றார்.திரும்பி வந்து அவர் பார்க்கும் போது, கடையில் அந்த வாலிபரை காணவில்லை. ஆனால் அவரிடம் கொடுத்த 4 தலையணைகள் அப்படியே கடையில் இருந்தன. உடனே தர்மராஜ், கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை பார்வையிட்டார். அதில் தலையணை வாங்க வந்த வாலிபர், கல்லாபெட்டியிலிருந்த ரூ.9,400 கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தர்மராஜ் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து கொள்ளையனை பிடிக்க தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார் ஆலோசனையின் பேரில் நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் பிரேம்குமார், கணேசன், மணிகுமரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தர்மராஜ் கடை மற்றும் நாசரேத்தின் முக்கிய தெருக்களில் உள்ள சிசிடிவி காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காமிராவில் பதிவான கொள்ளையனின் புகைப்படத்தை தங்கள் வாட்ஸ் அப்பில் பதிவிட்டு தேடி வந்தனர்.
 
இந்நிலையில் சாயர்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் நிற்பதை கண்டு அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர் புதுக்கோட்டை அருகே செபத்தையாபுரம், சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தர் மகன் பிரபு (30) என்பதும் அவர் தான் நாசரேத், காயல்பட்டினம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதாவது 2020ம் ஆண்டு, டிச.28ம் தேதி நாசரேத் காதி கிராப்டில் பொருட்கள் வாங்குவது போல் ரூ.9,200 ஐயும், 30ம் தேதி காயல்பட்டினத்தில் ஒரு ஸ்டேஷனரி கடையில் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்ததையும் ஒப்புக்கொண்டார்.நாசரேத் தனிப்படை போலீசார் பிரபுவை கைது செய்தனர். கொள்ளையடித்த ரூ.2,18,600 பறிமுதல் செய்தனர். கொள்ளையன் பிரபுவை விரைவாக கைது செய்த நாசரேத் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படையினரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags : Kayalpattinam, Nazareth ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...