×

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழாவில் பொழுதுபோக்கு அம்சங்களை நடத்த ரூ.1.15 கோடிக்கு ஏலம் தேர்தல் விதிமுறை மீறல்?

தேனி, மார்ச் 6: தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் எட்டு நாட்கள் 24 மணிநேர திருவிழா நடக்கும். இத்திருவிழாவைக் காண தேனி மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர். கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் உற்சாகமடையும் வகையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து அறநிலைய துறை சார்பில் தனியார் மூலம் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள், மாயாஜால நிகழ்ச்சிகள், உணவுக் கூடங்கள் அமைக்கப்படும். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பக்தர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ்வது வழக்கம்.  

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து வருகிற மே 11ம் தேதி முதல் திருவிழா நடக்க உள்ளது. எனவே, திருவிழாவின்போது பொழுதுபோக்கு அம்சங்களை நடத்திக்கொள்ள கடந்த பிப்.5ம் தேதி இந்துசமய அறநிலையத்துறை மூலம் ஏலம் நடத்தப்பட்டது. அப்போது அரசு நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டதால் ஏலம் மறுதேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த பிப்.24ம் தேதியும் இரண்டாம் முறையாக ஏலம் நடத்தப்பட்டது. அப்போதும் ஏலத்தொகை  மிகக்குறைவாக கேட்கப்பட்டதால் ஏலம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் ஏலம் நடக்குமா என எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மாலை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நிர்வாக அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் கோயில் செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலையில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் இயந்திர ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை நடத்திக்கொள்ள மகேந்திரன் என்பவர் கூடுதல் தொகையாக ரூ.1 கோடியே 15 லட்சத்திற்கு ஏலம் கேட்டார்.

இதேபோல உணவுக்கூடங்கள் நடத்திக்கொள்ள ரூ.15 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். அதிகபட்ச தொகையாக ஏலம் கேட்டதால் அதிகாரிகள் இத்தொகை குறித்து இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்க உள்ளதாகதெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏலம் நடந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே, நடத்தப்பட்ட ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, அனுமதி பெற்றுத்தான் ஏலம் நடத்தப்பட்டது’ என்றனர்.

Tags : Veerapandi Temple ,Chithirai Festival Violation ,
× RELATED கொரோனா கட்டுப்பாடுகளால் வீரபாண்டி...