மரப்பட்டறை குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மரச்சாமான்கள் நாசம்

வருசநாடு, மார்ச் 6: மயிலாடும்பாறை மரப்பட்டறை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் முத்தையா. இவர், தேனி - வருசநாடு சாலையில் மரப்பட்டறை மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இங்குள்ள குடோனில் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களை செய்ய தேக்கு, தோதகத்தி, கருங்காலி, மருதம், வேம்பு உள்ளிட்ட மரங்களை இருப்பு வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மரப்பட்டறையில் பணி முடிந்து பணியாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மரப்பட்டறையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

குடோன் முழுவதும் மளமளவென பரவியது. இதில், குடோனில் மேற்புறப்பகுதி இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், மயிலாடும்பாறை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து வருசநாடு, கடமலைக்குண்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் தேக்கு, தோதகத்தி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டில், சேர், மர பீரோ உள்ளிட்ட பர்னிச்சர்கள் எரிந்து நாசமானது. மரப்பட்டறையில் இருந்த இயந்திரங்களும் தீயில் கருகின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிந்து, மின்கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டதா? யாரேனும் தீ வைத்தார்களா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>