×

3ம் கட்டமாக 66 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வரத்து

சேலம், மார்ச் 6: சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கியதையடுத்து, தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 32 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 54 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு 2 கட்டங்களாக கோவிஷீல்டு, கோவாக்சின் என 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. தற்போது, 3வது கட்டமாக 57 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மண்டலத்திற்கு 1 லட்சத்து 44 ஆயிரம்  தடுப்பூசிகள் வந்துள்ளது. இதில் சேலத்திற்கு 57,800 தடுப்பூசிகள், நாமக்கலுக்கு 27,500 தடுப்பூசிகள், தர்மபுரிக்கு 27,700 தடுப்பூசிகள் மற்றும் கிருஷ்ணகிரிக்கு 31 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களை தொடர்ந்து, தற்போது பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதால் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுமக்களும் தடுப்பூசி போட்டு கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்,’ என்றனர்

6.46 லட்சம் பேருக்கு டெஸ்ட்
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் இதுவரை 6.45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த 32,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 32,245 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 467 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 69 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்