சிவகங்கை தீயணைப்பு நிலைய கட்டண ரசீதில் பல லட்சம் மோசடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை, மார்ச் 6: சிவகங்கை தீயணைப்பு நிலைய கட்டண ரசீதில் மோசடி செய்து பல லட்ச ரூபாய் சுருட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை, திருப்புத்தூர், சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, கோயில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்படும். வாகன கட்டணம், ஒரு கிமீ தூரத்திற்கான கட்டணம் என தீயணைப்பு நிலையம் சார்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பணம் பெறப்படுகிறது. இதற்காக தீயணைப்பு நிலையத்தில் இருந்து ரசீது வழங்கப்படும். இந்நிலையில் சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் ரசீதில் மோசடி செய்து பல லட்சம் சுருட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அசல் ரசீது கட்டணம் செலுத்துபவர்களிடம் வழங்கப்படும். இதனுடைய கார்பன் பேப்பர் வைக்கப்பட்டுள்ள நகல் அலுவலகத்தில் இருக்கும். ஆனால் கார்பன் வைக்காமல் அசல் ரசீதில் ஒரு கட்டணத்தை எழுதிவிட்டு, கீழேயுள்ள நகலில் குறைவான கட்டணம் எழுதி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மோசடி நடைபெறுகிறது. இவ்வாறு ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெறுவதாக தீயணைப்பு நிலைய பணியாளர்களே குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,‘சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் இந்த மோசடி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. சமீபத்தில் சிவகங்கை அருகே தமறாக்கி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற ரசீது மோசடி குறித்து ஆதாரப்பூர்வமாக தீயணைப்பு (ம) மீட்பு பணிகள் துறை துணை இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளோம். ரசீது புத்தகத்தை ஆய்வு செய்தால் மோசடி தெரியவரும்.  இவ்வாறு மோசடி செய்யும் சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>