×

பறக்கும்படை வாகன சோதனை மாகே- கேரளா எல்லையில் 18 கிலோ நகைகள் பறிமுதல் வருமான வரித்துறை அதிரடி விசாரணை

புதுச்சேரி,  மார்ச் 6:  புதுச்சேரி மாநிலம் மாகே, கேரளா எல்லையில் பறக்கும்படை நடத்திய  வாகன சோதனையில் 18 கிலோ நகைகள் சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறை  விசாரணை நடத்தி வருகிறது.
 தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கு ஏப்ரல்  6ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நன்னடத்தை விதிகள் அமலில்  இருப்பதால் பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் கடத்தலை தடுக்க ஒவ்வொரு  மாநில எல்லையிலும் பறக்கும்படை அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.  மாகேயில் 6 எல்லைகளில் சோதனை நடக்கிறது. அதன்படி புதுச்சேரி மாநிலம்,  மாகே பிராந்திய புரவிபுழா எனும் சோதனைச் சாவடியில் எஸ்பி ராஜசேகர்  உத்தரவின்
பேரில் இன்ஸ்பெக்டர் ஆடலரசன், எஸ்ஐ புனிதராஜ் தலைமையிலான தேர்தல்  பறக்கும் படை நேற்று மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தை திடீரென  சோதனை நடத்தினர். அப்போது கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து  கண்ணூர் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை பறக்கும் படை மடக்கி சோதனையிட்டது.

அப்போது அதில் ரூ.9 கோடி மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள் இருந்தது  கண்டறியப்பட்டது. இதற்கான முழு ஆவணங்களை கேட்டபோது உரிய பதில் இல்லாததால்  அவற்றை உடனே பறக்கும் படையினர் காருடன் பறிமுதல் செய்து மாகே வருவாய்  அதிகாரி சிவராஜ் மீனாவிடம் ஒப்படைத்தனர்.அப்போது பிடிபட்ட டிரைவர்,  செக்யூரிட்டி, நகைக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை  நடத்தப்பட்டது. அப்போது பிரபல தனியார் நகைக்கடை நிறுவனத்தில் இருந்து  சப்ளைக்காக அவற்றை மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.  இதற்கான ஆவணங்களை காண்பித்தபோதும் வருமான வரி (ஜிஎஸ்டி) தொடர்பான சிக்கல்  நிலவியதால் மாகே வருவாய் நிர்வாகம், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தது.  அங்கிருந்து அதிகாரிகள் வந்து அவற்றை ஆய்வு செய்தபின் நகைகள் அனைத்தும்  நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று  தெரிகிறது. இச்சம்பவம் மாகே பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளன.



Tags : Air Force ,Mackay-Kerala border ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...