×

அண்ணாமலை பல்கலையில் இருந்து பணி நிரவலில் சென்ற ஊழியர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன் தர்ணா

சிதம்பரம், மார்ச் 6:  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதி சிக்கலில் சிக்கி தவிப்பதால் பல்கலைக்கழகத்தை தனிச்சட்டம் இயற்றி தமிழக அரசு ஏற்றது. பின்னர் இங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அந்த வகையில் பல்கலை கழகத்தில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், இளநிலை தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட 179 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நிரவல் செய்யப்பட்டு அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் பணி நிரவலில் சென்ற இடங்களில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொறுப்புகளில் நியமிக்கப்படாமல் பல்வேறு பொறுப்புகளில் பணி அமர்த்தப்பட்டனர். இது குறித்து அந்த ஊழியர்கள் ஏற்கனவே சிதம்பரத்தில் பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பணி நிரவல் ஊழியர்கள் நேற்று துணைவேந்தர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் விரைவில் இந்த கோரிக்கை குறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : Dharna ,Vice Chancellor ,Annamalai University ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!