×

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திர ஒதுக்கீடு பணி

நாகர்கோவில், மார்ச் 6: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திர ஒதுக்கீடு பணி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத்துக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதமே உள்ளது. இந்த முறை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வாக்குப்பதிவுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட உள்ளன. வாக்காளர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வாக்குசாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, வாக்குப்பதிவுக்கான நேரம் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,624 வாக்குச்சாவடிகள் இருந்தன. கிராமப்புறங்களில் ஒரு வாக்குசாவடிக்கு குறைந்த பட்சம் 1200 பேரும், நகர்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 1,400  பேரும் வாக்காளர்களாக இருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் ஆயிரத்துக்கு குறைவான வாக்காளர்களை வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் அதிகாரிகள் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். அதன்படி குமரி மாவட்டத்தில் 549 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்கு சாவடி எண்ணிக்கை 2,243 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் 417, நாகர்கோவில் 390, குளச்சல் தொகுதியில் 372, பத்மநாபபுரம் தொகுதியில் 348, விளவங்கோடு தொகுதியில்  358, கிள்ளியூர் தொகுதியில் 358 கூடுதல் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் தோவாளை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. 3,809 மின்னணு எந்திரங்களும், 2,782 கட்டுப்பாட்டு கருவிகளும், 2,937 விவி பேட் இயந்திரங்களும் உள்ளன. மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 1 மாதமே உள்ள நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகள், இன்று தொடங்குகின்றன. இன்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடக்கிறது. மின்னணு எந்திரங்கள் சுழற்சியில் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் திங்கள்சந்தை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ளன. அடுத்த கட்டமாக இவை, சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Kumari district ,
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்