×

பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ரசீது மூலம் பணம் கையாடல் விவகாரம் சஸ்பெண்ட் ஆன 7 பேரிடம் விசாரணை

திருப்பூர், மார்ச். 6: திருப்பூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசுபணம் கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் நெரிப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரசீது வழங்குவதில் முறைகேடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பதிவுத்துறை மண்டல தலைவர் ஜெகதீசன் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் ஆன்லைன் மூலம் போலி ரசீது வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சார் பதிவாளர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 மேலும் இது குறித்து மாநகர மத்திய குற்றப்பிரிவில் மாவட்ட பதிவாளர் ராமசாமி, பதிவுத்துறை அலுவலகங்களில் ரூ. 69 லட்சம் கையாடல் செய்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார்.
இவ்வழக்கு தொடர்பாக  திருப்பூர் இணை சார் பதிவாளர் அலுவலகம் எண் 1ல் உதவியாளராக பணியாற்றிய சங்கர்(33). மற்றும் டைப்பிங் சென்டர் நடத்தி வரும் ஜெய்சங்கர்(35)ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7  பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...