அய்யா அவதார தின விழா சாமிதோப்புக்கு பிரமாண்ட ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில், மார்ச் 5: அய்யா அவதார தின விழாவையொட்டி நேற்று காலை, நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு நடைபெற்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்டர் அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு நேற்று முன்தினத்தில் இருந்தே அய்யாவழி பக்தர்கள் குவிய தொடங்கினர். முன்னதாக நேற்று முன்தினம் காலை திருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ள அவதாரபதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம்  இரவு நாகர்கோவில் நாகராஜாகோயில் திடலை வந்தடைந்தது. இதே போல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வடக்கு வாசலில் இருந்து நேற்று முன்தினம் காலை தொடங்கிய அய்யா வாகன ஊர்வலம் இரவில் நாகராஜாகோயில் திடலை வந்தடைந்தது.

பின்னர் அங்கு அய்யாவழி சமய மாநாடு நடந்தது. விடிய விடிய அய்யா வழி பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவதார தின விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு அய்யாவழி பக்தர்களின் ஊர்வலம் புறப்பட்டது. பக்தர்கள் அய்யாவின் காவிகொடியை கையில் ஏந்தி அய்யா அரகரா.. அரகரா.. சிவ, சிவ அரகரா... என நாமம் சொல்லியபடி சென்றனர். ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். அய்யா வாகனத்தில் அகிலதிரட்டு நூல் வைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்களின் பவனி கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப்பதியை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்ன தர்மங்கள், சர்பத், மோர், பானகரம் வழங்கப்பட்டன. தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. சாமிதோப்பு நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதர்மங்கள் வழங்கப்பட்டன. இரவு சாமிதோப்பு கலையரங்கில் கருத்தரங்கம் நடந்தது.  ஈத்தங்காடு முதல் சாமிதோப்பு வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நேற்று (4ம்தேதி) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும். நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

பக்தர்கள் போராட்டம்

ஒவ்வொரு வருடமும் அவதார தினவிழா ஊர்வலம் நடக்கும்போது காலை 6 மணியிலிருந்து 12 மணி வரை கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஊர்வலம் சுசீந்திரம் ஈத்தங்காடு பகுதிக்கு வரும்போது தமிழ்நாடு அரசு பஸ்களும்  தனியார் வாகனங்களும் அதிக அளவில்  எதிரே வரத் துவங்கின. இதனால் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த பெண்கள் நடுரோட்டில் அமர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து, ஊர்வலத்திற்கு வாகன போக்குவரத்தால் இனி எந்த பாதிப்பும் ஏற்படாது  என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீண்டும் ஊர்வலத்தில் சென்றனர்.

Related Stories:

>