×

7ம் தேதி நாகர்கோவில் வருகை அமித்ஷா கலந்துகொள்ளும் இடங்களில் டிஐஜி ஆய்வு

நாகர்கோவில், மார்ச் 5: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் பா.ஜ கட்சி குமரி மாவட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரசார திட்டங்களை வகுத்துள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7ம் தேதி காலை  நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம்  பீச்ரோடு சந்திப்பு வழியாக சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் கோட்டார், இந்து கல்லூரி சாலை, செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு வருகிறார். வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

பின்னர் அங்கிருந்து வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகில் உள்ள உடுப்பி ஓட்டலுக்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்துகிறார். அமித்ஷா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இருந்து உள்துறை அலுவலக அதிகாரிகள் நாகர்கோவில் வந்து அவர் செல்லும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று நெல்லை சரக டிஐஜி பிரவின் குமார் அபிநவ் குமரி வந்தார். முதலில் சுசீந்திரம் கோயிலுக்கு சென்று பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் பீச்ரோடு, இந்து கல்லூரி சாலை, செட்டிகுளம், வேப்பமூடு ஜங்சன் பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தும் ஓட்டலிலும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது எஸ்பி பத்ரிநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : DIG ,Amit Shah ,Nagercoil ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...