×

பாடாலூரில் தண்ணீர் வசதியுடன் கூடிய பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்

பாடாலூர், மார்ச் 5: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பகுதியில் தண்ணீர் வசதியுடன் கூடிய இலவச சுகாதார வளாகம் அமைக்க வேண்டுமென பயணிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.ஆலத்தூர் தாலுகா பாடாலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் செட்டிகுளம் செல்லும் இணைப்பு சாலையும், ஊட்டத்தூர் செல்லும் இணைப்பு சாலையும் உள்ளது.பாடாலூர் சுற்றுப்புற கிராமங்களான கூத்தனூர், இரூர், சீதேவி மங்கலம், மணியாங்குறிச்சி, நெடுங்கூர், ஊட்டத்தூர், காரை, புதுக்குறிச்சி, தெரணி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களுக்கும் முக்கிய வணிகத் தளமாக விளங்கி வருகிறது .

பாடாலூரிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம், ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகம், என்பது உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக பணிகளுக்காக நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆலத்தூர் தாலுகாவின் கிழக்கு பகுதியில் உள்ள தெரணி , அயினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொது மக்களும், அதேபோல் ஆலத்தூர் தாலுகாவில் மேற்கு பகுதியான நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, சிறுவயலூர், அடைக்கம்பட்டி, டி.களத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட அலுவலகப் பயன்பாட்டுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர். பாடாலூரில் அரசு மேல்நிலைப் பள்ளி, வட்டார வள மையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த பகுதிக்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் வசதியுடன் கூடிய இலவச சுகாதார வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Badalur ,
× RELATED செட்டிகுளத்தில் மினி டிராக்டர் மோதி...