×

கபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்

பாபநாசம், மார்ச் 5: கபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. பாபநாசம் - கபிஸ்தலம் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாபநாசத்திலிருந்து சுவாமிமலை, திருவையாறு செல்பவர்கள் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக செல்பவர்கள் குடமுருட்டி, திருமலைராஜன், அரசலாறு, காவிரி உள்ளிட்ட பாலங்களை கடந்து செல்ல வேண்டும். கபிஸ்தலம் அருகில் மேல கபிஸ்தலம், உம்பளாப்பாடி, ராமானுஜபுரம், உமையாள்புரம், அண்டக்குடி, தென்சருக்கை, வட சருக்கை, கருப்பூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் கபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுப்பட்டதுடன், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாய நிலை இருந்தது. இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Tags : Kapistalam Cauvery River ,
× RELATED கபிஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம்