×

கும்பகோணத்தில் நடந்தது திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் புனிதம் காக்கப்படுமா?

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 5: திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் காவிரியின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரதத்தின் புனித நதிகளில் சிறப்புடையதாக விளங்குவது காவிரி நதியாகும். மக்கள் பல இடங்களில் செய்யும் பாவங்கள் கங்கை நதியில் குளிப்பதால் விலகும் என்றும், கங்கைக் கரையில் செய்த பாபங்கள் காவிரி நதியில் குளிப்பதால் விலகும் என்றும் புராண வரலாறாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் காவிரி ஆற்றில் புனித நாட்களில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளியில் நாயன்மார்களால் பாடல் பெற்ற சவுந்தநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் உள்ளது. இங்கு மாதம் தோறும் விழாக்கள் கொண்டாடப் பட்டுவருகிறது. அந்த நாட்களில் சுவாமி வீதி உலாவாக வந்து காவிரி ஆற்றின் படித்துறையில் இறங்கி தீர்த்தவாரி நடைபெறும்.

அப்போதும் மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மகிழ்வார்கள். இக்கோயிலில் நடைபெரும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடுவார்கள். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பல் வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆராதனைகள் செய்து, இறுதியாக காவிரி ஆற்றில் கரைக்க இங்கு தான் வருவார்கள். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி நிர்வாகம் இறந்தவர்களுக்கு காரியங்கள் செய்ய என்று காவிரிகரையில் படித்துறைக்கு கிழக்கே தனியாக ஒரு கட்டிடம் கட்டி அங்கு தான் காரியங்கள் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதனை யாரும் பயன்படுத்தாமல் காவிரி ஆற்றின் படித்துறையிலேயே காரியங்களை செய்ய தொடங்கி விட்டனர். தற்போது புனித இடமாக காக்கப்பட வேண்டிய காவிரி ஆற்றின் படித்துறையில் கட்டம் போட்டு இறந்தவர்களின் சடங்குகளை செய்து வருகின்றனர்.

மேலும் படைக்கப்பட்ட பொருட்கள், பழைய துணிகளை அங்கே போட்டு காவிரி ஆற்றின் புனிதத்தை நாசம் செய்து வருகின்றனர். இதனால் காவிரி ஆற்றில் குளிக்க செல்வோர் அதனை தாண்டி செல்லவே அச்சப்படுகின்றனர். காவிரி ஆற்றின் படித்துறைக்கு எதிரில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இது குறித்து அவர்களிடம் பொது மக்கள் பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் இரவு நேரங்களில் குடிமகன்கள் பாட்டில்களை ஆற்றில் வீசி செல்வதால் குளிக்க செல்வோர் காவிரி ஆற்றில் இறங்கவே அச்சப்படும் நிலை உள்ளது. இறந்தவர்களின் காரியங்களை அதற்காக உள்ள கட்டித்தில் செய்யவும், படித்துறைகளை சீர் செய்து அதன் புனிதம் காக்கவும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...