×

முகாமிலிருந்து திரும்பிய ஆண்டாள் கோயில் யானைக்கு திருவில்லி.யில் உற்சாக வரவேற்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 5: கோவை அருகே தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து திரும்பிய திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ம் தேதி துவங்கியது. இம்முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டன.

இதில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா யானையும் பங்கேற்றது. கடந்த 20ம் தேதி ஜெயமால்யதாவை பாகன் ராஜா (எ) வினில்குமார், உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினர். இந்த வீடியோ வைரலானது. இது தொடர்பாக, கோயில் நிர்வாகம் புகார் தெரிவித்ததன்பேரில் வினில்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பாகன்கள் 2 பேரும் வனத்துறை சார்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புத்துணர்வு முகாமில் யானை ஜெயமால்யதா சரியாக உணவருந்தாமல் ஏக்கத்துடன் இருந்தது. இதையடுத்து முகாமிலிருந்து ஆண்டாள் கோயில் யானையை மீண்டும் திருவில்லிபுத்தூர் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி தேக்கம்பட்டி முகாமிலிருந்து யானை ஜெயமால்யதா நேற்று காலை திருவில்லிபுத்தூர் வந்தது. யானைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீபாராதனை காண்பிக்கப்பட்டு யானைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், பழங்கள் கொடுத்து வரவேற்றார். இதில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது யானை ஜெயமால்யதாவை திருச்செந்தூரை சேர்ந்த பாகன் சுப்பிரமணி மற்றும் திருப்பதி ஆகியோர் பராமரித்து வருகின்றனர். கோயிலுக்கு மீண்டும் யானை திரும்பியுள்ளதால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags : Andal Temple ,Thiruvilli ,
× RELATED ரேவதி நட்சத்திரத்தில் ரெங்கமன்னார் புறப்பாடு