×

புதிய கட்சி தொடர்பாக எல்லா கேள்விகளுக்கும் 2 நாளில் பதிலளிக்கிறேன்: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி

 

சென்னை: தனிக்கட்சி தொடங்க போகிறார் என்ற பரபரப்புக்கு மத்தியில் அண்ணாமலை இன்று அல்லது நாளை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அவர் பாஜக தேசிய தலைவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக சரமாரியாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் ”என் மண், என் மக்கள்” எனும் யாத்திரையை நடத்தி பாஜகவின் கட்டமைப்பை பலப்படுத்தினார். இதனால் அவருக்கென தனி ரசிக பட்டாளமே உருவானது.

மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கென ஆதரவாளர்கள் இன்னும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவருக்கு இதுவரை பதவி ஏதும் வழங்கப்படவில்லை.

அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் கூட அண்ணாமலைக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ எந்த சீட்டும் வழங்கவில்லை. அண்ணாமலையின் ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி தனக்கு சீட் கொடுக்கும் என நினைத்து பிரசார வாகனத்தை வாங்கி வைத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து பாஜகவில் இருந்து அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக பலர் புதுக்கட்சி தொடங்குமாறு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவில் எந்தவொரு பொறுப்பிலும் அண்ணாமலை இல்லை. என்றாலும் கூட, அவரது கருத்துகளும் அறிக்கைகளும் எப்போதுமே பேசுபொருளாகும். அந்த வகையில், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை அண்மையில் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார்.

இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. மத்திய அரசின் எந்தத் திட்டத்துக்கும் முதல் ஆளாக ஆதரவுக் குரல் கொடுப்பவர், முதன்முறையாக எதிர்ப்புக்குரலை ஓங்கி ஒலித்தார். இது கட்சிக்குள் பெருத்த சலசலப்பை உண்டாக்கியது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார். அதனால்தான் மத்திய பா.ஜ.க அரசை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று பாஜகவில் உள்ளவர்களே பேச தொடங்கினர்.

அதே நேரத்தில் வருகிற 4ம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் புதிய கட்சி தொடர்பாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். கட்சிக்கு பெயர் கூட பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை புதிய கட்சி தொடங்க போவதாக அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அவர் எண்ண முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சி தொடங்கும் பட்சத்தில் தமிழக இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அதிலும் கொங்கு மண்டலத்தில் வரும் பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதை பாஜக தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் ஆந்திரா மாநிலத்தில் காலியாகும் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலைக்கு எம்பி பதவி கொடுத்து அவரை மத்தியமைச்சராக்கும் திட்டமும் பாஜக தலைமையிடம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் அவர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவரிடம் அண்ணாமலை தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

புதிய கட்சி தொடர்பாக 2 நாளில் பதிலளிக்கிறேன் என்றும் எல்லா கேள்விகளுக்கும் 2 நாளில் பதிலளிப்பதாக டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

Tags : BJP ,Annamalai ,Chennai ,Delhi ,Dhanikadshi ,Tamil Nadu Party ,
× RELATED 2026 மே மாதத்தில் 90.14 லட்சம் பயணிகள் பயணம்...