×

வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் ராணுவவீரர்கள் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

வாடிப்பட்டி/அலங்கை, மார்ச் 5: தேர்தலையொட்டி வாடிப்பட்டி பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதிலும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக வாடிப்பட்டியில் நேற்று ராணுவ வீரர்கள் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மதுரை ஏடிஎஸ்பி வனிதா தலைமையில் வாடிப்பட்டி மாதா கோவிலில் இருந்து கிளம்பிய அணிவகுப்பு பழைய நீதிமன்றம் வரை சென்றது. இதில் சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கிய ராஜ், பயிற்சி டிஎஸ்பி சுரேஷ், துணை ராணுவப்படை துணை கமிஷனர் ஜேக்கப் கோஷி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர், சமயநல்லூர் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

இதேபோல் அலங்காநல்லூரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், வாடிப்பட்டி காவல்ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின், அலங்காநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் துணை ராணுவப்படையினர், மதுரை மாவட்ட ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல்படை போலீசார், ஊர்காவல்படை, சட்டம் ஒழுங்கு போலீசார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Vadippatti ,Alankanallur ,
× RELATED மண்டல பூஜை விழா