×

கொரோனா முன்னெச்சரிக்கையாக வாக்கு எண்ணும் பணி 2 மையங்களில் நடக்கிறது

திண்டுக்கல், மார்ச் 5: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் தொகுதியில் 397,  நத்தத்தில் 402, வேடசந்தூரில் 368, பழநியில் 405, ஒட்டன்சத்திரத்தில் 352, ஆத்தூரில் 407, நிலக்கோட்டையில் 342 என மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மொத்த வாக்காளர்கள் 18.73 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது 7 தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. ஆனால், இந்த முறை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுளளது. அதன்படி திண்டுக்கல், நத்தம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஜிடிஎன் கல்லூரியிலும், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அண்ணா பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இந்த முறை 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திண்டுக்கல்,  நத்தம்  தொகுதிகளுக்கும் ஒரே தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் ஒரே இடத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...