தேர்தல் செலவினங்களை கணக்கீடு செய்ய அரசியல் கட்சி பிரதிநதிகளுடன் மாவட்ட கலெக்டர்ஆலோசனை

திருப்பூர்,மார்ச்4: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களை கணக்கீடு செய்வதற்காக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான  ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நாள்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களை கணக்கீடு செய்வதற்காக, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு மற்றும் இதர அத்தியாவசியமான பொருட்களுக்கும் திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் நிலையான விலைப்புள்ளி பட்டியல் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  நேற்று கூட்டம் நடந்தது.  இதில் அரசியல் கட்சிகளின் கருத்துகள் பெறப்பட்டது. அவற்றினை அடிப்படையாக கொண்டு, நிலையான விலைப்புள்ளி பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் செலவினங்களை நிர்ணயம் செய்யப்பட உள்ள நிலையான விலைப்புள்ளி பட்டியல் கொண்டு கணக்கீடு செய்து, அவர்களது தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படும் எனவும், தேர்தலின் போது நியமனம் செய்யப்படும் தேர்தல் செலவின மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்படும் என கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.இதில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் கூறியதாவது: நிலையான விலைப்புள்ளி பட்டியல் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. அதனைதமிழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோட்டீஸ், மண்டபம் மற்றும் உணவு உள்ளிட்டவைகளுக்கு விலைப்புள்ளி அதிகமாக உள்ளது. குறிப்பாக மண்டபங்கள் என்று எடுத்துக் கொண்டால், மாநகராட்சிக்கு ஒரு வாடகை வரும். அதே சமயம் ஊராட்சி பகுதிக்கு ஒரு வாடகை வரும். ஆகவே இவற்றை கருத்தில்கொண்டு விலைப்புள்ளி பட்டியல் வெளியிட வேண்டும்.

அதே போல்  போலீசார் அனுமதி எளிதில் பெறும் வகையில், பிரச்சார பகுதிகளை அதிகரித்து தர வேண்டும் என்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல்ஹமீது (பொது), ஜெயபாலன்(கணக்குகள்), தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>