×

வெற்றி பெற்று 1 மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாத லீமா ரோஸ்: அதிமுகவினர் கடுப்பு

திருச்சி: லால்குடி தொகுதியில் வெற்றி பெற்று 1 மாதமாகியும் லீமா ரோஸ் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வராததால், அவர் மீது அதிமுகவினர் கடுப்பில் உள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லீமா ரோஸ். இவர் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி. தற்போது தவெக அமைச்சரவையில் அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மாமியார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின் இவர் வேலுமணி அணியில் இணைந்து செயல்பட்டார். அந்த அணியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அண்மையில் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய லீமா ரோஸ் தான் காரணம். இவர் தான் பணத்தாசை காட்டி தவெக பக்கம் திருப்பி விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை லீமா ரோஸ் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் வெற்றி பெற்று சென்று 1 மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க லீமா ரோஸ் சொந்த தொகுதிக்கு வரவில்லை என்பதால் அவர் மீது அதிமுகவினர் கடுப்பில் உள்ளனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்றதும், வெற்றிச்சான்றிதழோடு லீமா ரோஸ் சென்னை புறப்பட்டு சென்றார். அங்கு வேலுமணி அணியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் வேலுமணி அணி, மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்து விட்டது. இதன் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் சொந்த தொகுதிகளுக்கு திரும்பி நன்றி கூறி வருகின்றனர். ஆனால் லீமா ரோஸ் லால்குடிக்கு வராமல், சொந்த ஊரான கோவைக்கு சென்று விட்டார்.

மற்ற கட்சிகளில் வெற்றி பெற்றவர்கள், ஏன் தோல்வி அடைந்தவர்கள் கூட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் சூழலில், லீமா ரோஸ் இன்னும் நன்றி சொல்ல வராதது லால்குடி தொகுதி அதிமுகவினர், வாக்காளர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அணி தாவுவதில் அவருக்கிருந்த ஆர்வம், சுறுசுறுப்பு வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதில் அவருக்கு இல்லை என்றனர்.

Tags : Lema Rose ,Commissioner ,Trichy ,Lalgudi ,Lalgudi Assembly Constituency ,Trichy District ,
× RELATED சட்டம்-ஒழுங்கை சீரமைத்து மக்களின்...