×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 7ம் தேதி நாகர்கோவில் வருகை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

நாகர்கோவில், மார்ச் 4 : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 7ம் தேதி நாகர்கோவில் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் பாஜ குமரி மாவட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரசார திட்டங்களை வகுத்துள்ளது. ஏற்கனவே  3 முறை பா.ஜ. மாநில தலைவர் முருகன் நாகர்கோவில் வந்து பிரசார யுக்திகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ தேசிய தலைவர்கள் வர உள்ளனர். பிரதமர் மோடி கூட, பிரசாரத்துக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7ம் தேதி காலை 10.30க்கு நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கும் அவர் அங்கிருந்து கார் மூலம்  பீச்ரோடு சந்திப்பு வழியாக சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் கோட்டார், இந்து கல்லூரி சாலை, செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு வருகிறார். வேப்பமூடு காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

பின்னர் அங்கிருந்து வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகில் உள்ள உடுப்பி ஓட்டலுக்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
நாகர்கோவில் வரும் அவர் இந்து கல்லூரி சந்திப்பு முதல் வேப்பமூடு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவில் பங்கேற்று பேசுகிறார். அமித்ஷா வருகையைதொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிபேடு, சீரமைக்கப்பட்டு வருகிறது. அமித்ஷா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இருந்து உள்துறை அலுவலக அதிகாரிகள் நாகர்கோவில் வந்துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் அமித்ஷா  நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டல்,  வேப்பமூடு சந்திப்பு, ஆயுதப்படை மைதானம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், சட்டமன்ற தொகுதி தலைவர் தேவ், ஆகியோர் உடன் இருந்தனர். டி.எஸ்.பி. வேணுகோபால் மற்றும் போலீசாரும் உடன் வந்திருந்தனர்.

Tags : Union Home Minister ,Amit Shah ,Nagercoil ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்திற்காக...