×

நாகர்கோவிலில் துணை ராணுவம், போலீஸ் கொடி அணிவகுப்பு எஸ்.பி. தலைமையில் நடந்தது

நாகர்கோவில், மார்ச் 4: நாகர்கோவிலில் நேற்று துணை ராணுவம், போலீஸ் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இதில் எஸ்.பி. உள்பட 225 பேர் கலந்து கொண்டனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. கடந்த 26ம் தேதி தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அன்று முதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இவர்களில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள துணை ராணுவத்தினர் (எல்லை பாதுகாப்பு படை) ஒரு கம்பெனி வீரர்கள் (90 பேர்) உதவி கமாண்டர் நவீன் ஜக்சார் தலைமையில் குமரி மாவட்டம் வந்துள்ளனர். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் பதற்றமான வாக்கு சாவடிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் காவல்துறை சார்பில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது. நாகர்கோவிலில் அண்ணா ஸ்டேடியம் முதல் இடலாக்குடி வரை நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பில் துணை ராணுவத்தினர் (பிஎஸ்எப்) 60 பேர், ஆயுதப்படையினர் 50 பேர், சிறப்பு காவல் படையினர் 60 பேர் மற்றும் போலீசார் 45 பேர் என மொத்தம் 225 பேர் கலந்து கொண்டனர். எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் இந்த அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏ.டி.எஸ்.பி.க்கள்  ஈஸ்வரன், மணிமாறன், டி.எஸ்.பி. (தேர்தல்) பீட்டர் பால், ஆயுதப்படை டி.எஸ்.பி. சாம் வேத மாணிக்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tags : Nagercoil ,paramilitary ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு