×

வயல்வெளி வழியாக சடலம் சுமந்து செல்லும் அவலம் பெரணமல்லூர் அருகே கிராம மக்கள் வேதனை மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால்

பெரணமல்லூர், மார்ச் 4: பெரணமல்லூர் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்யும் அவலம் தொடர்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணிபுரத்தில் கிராமத்தில் 700க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் யாராவது இறக்க நேரிட்டால் அவர்களை அடக்கம் செய்ய ஊருக்கு வெளியே மயானம் அமைந்துள்ளது. அந்த மயானம் வயல்வெளியின் நடுவே உள்ளதால் அங்கு செல்வதற்கு முறையான பாதை கிடையாது. இதனால் சடலத்தை வயல்வெளியில் இறங்கி எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்த போலீஸ்காரர் ஒருவரது உடல், அரசு மரியாதையுடன் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க, ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.அப்போது, போலீஸ்காரர் உடலை அவரது உறவினர்கள் அங்குள்ள வயல்வெளியில் இறங்கி எடுத்து சென்றனர். அங்கு, நெற்பயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில் சேறும், சகதியுமாக உள்ள வயலில் இறங்கி சடலத்தை சிரமத்துடன் எடுத்துச்செல்லும் நிலை இருந்தது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்களது கிராமத்தில் யாராவது இறக்க நேரிட்டால் அவர்களை மயானத்திற்கு எடுத்து செல்ல முறையான பாதை வசதி கிடையாது. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு முதல் கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் வரை பலமுறை மனு கொடுத்து பார்த்துவிட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானம் செல்ல பாதை இல்லாத காரணத்தால் எங்களது கிராமத்தில் உள்ளவர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர். எனவே, மயானத்திற்கு செல்ல பாதை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags : Peranamallur ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்