×

வேலூர் மாவட்டத்தில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் நேரில் ஆய்வு

வேலூர், மார்ச் 4: 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான 3 வாக்கு எண்ணும் மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை அலுவலகங்களில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். திமுகவில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது.அதேசமயம் தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூர், அணைக்கட்டு தொகுதிகளுக்கு வேலூர் பெரியார் அரசு பொறியியல் கல்லூரியும், காட்பாடி தொகுதிக்கு, காட்பாடி சட்டக்கல்லூரியும், குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமாக குடியாத்தம் ராஜகோபால் பலிடெக்னிக் கல்லூரியும் என்று 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? பத்திரிகையாளர்கள் அறை, போலீசார் கண்காணிப்பு அறை சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல தனி, தனி பாதை அமைக்க அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து ஆய்வு செய்த கலெக்டர் வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதுமாக தடுப்புகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். காட்பாடி சட்டக்கல்லூரியில் நடந்த ஆய்வின்போது, டிஆர்ஓ பார்த்தீபன், ஆர்டிஓ ஷேக்மன்சூர், சட்டக்கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, தாசில்தார்கள் பாலமுருகன், ரமேஷ், வத்சலா காட்பாடி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Vellore district ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...