×

மாரியம்மன், காளியம்மன் கோயில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

ஈரோடு, மார்ச் 4: ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயிலில் நேற்று நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயிலில் ஆண்டும் தோறும் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து கம்பம் நடப்பட்டு தினமும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்து வந்தது. கடந்த 1ம் தேதி கோயிலின் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு ஊர்வலமும், 2ம் தேதி இரவு குண்டம் திறப்பும், இரவு 8 மணிக்கு கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது.

முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முதலில் கோயில் பூசாரிகள் குண்டம் இறங்கினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்தனர். அதில், சிலர் அலகு குத்தியும், கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அம்மை அழைத்தல், மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு அம்மன் சிறப்பு அலங்கராத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (4ம் தேதி) 3 மணிக்கு கம்பம் எடுத்தலும், மஞ்சள் நீராட்டு விழாவும், 5ம் தேதி இரவு 7 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரிலுள்ள தவுட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோயில் குண்டம் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு கடந்த மாதம் 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது.

இதனைத் தொடர்ந்து கொடிசேலை கட்டும் நிகழ்ச்சி, ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு அலங்காரத்துடன் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் அந்தியூர், தவிட்டுபாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனையடுத்து சுவாமி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இன்று (4ம் தேதி) அக்னி கரகம் எடுத்து வருதல், அதனைத்தொடர்ந்து கம்பம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் பண்டிகை நிறைவடைகிறது.

Tags : Mariamman ,Kaliamman Temple ,Gundam ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு