×

பாரபட்சமின்றி அம்மன் வீதியுலா வரவேண்டி மக்கள் சாலை மறியல்

லால்குடி, மார்ச் 4: லால்குடி அருகே அன்பில் ஆச்சிராம வள்ளி அம்மன் கோயில் விழாவில் பாரபட்சமின்றி அம்மன் வீதியுலா வர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் ஆச்சி ராமவள்ளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் இதையொட்டி கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் காப்பு கட்டுதல், 22ம் தேதி 2ம் காப்பு கட்டுதல் என கோயில் நிர்வாகத்தால் ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்பில் பகுதியில் உள்ள ஒரு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் அம்மன் வீதியுலா வரவேண்டுமென அறநிலைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இது குறித்து லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் தலைமையில் திருவிழா தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருதரப்பினரும் சுமூகமாகமாக பேசி முடிவெடுத்த பின்னர் திருவிழா நடத்தலாம் என தேதி குறிப்பிடாமல் விழாவை ஒத்திவைக்க கடந்த மாதம் 23ம் தேதி உத்தரவிட்டார். இதனை அடுத்து கடந்த மாதம் 26ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தக்கார் மனோகரன் முன்னிலையில் கூட்டம் நடந்தது. அதில் அம்மன் வீதியுலா வரும் பாதையை கூடுதலாக இதர பகுதிகளுக்கு வரச்செய்யும் கோரிக்கை மட்டும் தற்போது கோயில் நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து லால்குடி ரவுண்டானா பகுதியில் அன்பில் கிராமத்திலுள்ள ஒரு பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாசில்தார் சித்ரா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கலைந்துசென்றனர்.

Tags : Amman Veediula ,
× RELATED நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பூப்பல்லக்கில் அம்மன் வீதியுலா