மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் கொண்டாட்டம்

மதுராந்தகம்4: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 81வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவருக்கு பாத பூஜை, வேள்வி பூஜை, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் சித்தர் பீடத்தில் கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை செவ்வாடை பக்தர்களால் நடத்தப்பட்டது. இதில், பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான நேற்று, அவரது இல்லத்தில் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பங்காரு அடிகளாரை ஊர்வலமாக அழைத்து வந்து, சித்தர் பீடத்தில் ஏற்பாடு செய்த சிறப்பு பூஜையில் அமர வைத்தனர். அங்கு அவர், ஓம் மேடை, புற்று மண்டபம், சப்த கன்னியர் சந்நதி ஆகியவற்றை வலம் வந்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார். பின்னர், ஆன்மிக இயக்க அரங்கில் செவ்வாடை பக்தர்கள் முன்னிலையில், பங்காரு அடிகளார், பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார்.

நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தணிகாசலம், முருகேசன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருள்மொழி, திரைப்பட இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்பட அரசியல் கட்சியினர், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்காரு அடிகளாரிடம் ஆசிபெற்றனர். ஆதிபராசக்தி இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி அறநிலைய அறங்காவலர் உமாதேவி, ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: