பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகையில் உள்ள செயலாளரிடம் சமர்ப்பித்தார். ஆளுநர் இல்லாத காரணத்தால் செயலாளரிடம் சமர்ப்பித்தார். கர்நாடகாவின் புதிய முதல்வராகிறார் டி.கே.சிவக்குமார். கர்நாடகாவில் நீண்ட இழுபறிக்கு பிறகு பதவியை ராஜினாமா செய்தார். சித்தராமையா. இதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க உள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையேதான் இந்த போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்ற விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், கர்நாடகாவில் முதல்வரை மாற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு மேலிட தலைவர்கள் கூறினர். மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினர். இதையடுத்து அவர் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து முதல்வர் சித்தராமையா, இன்று பெங்களூரு திரும்பினார். பின்னர் அமைச்சரவை கூட்டத்தை இன்று காலை தனது அதிகாரபூர்வ இல்லமான காவேரியில் கூட்டினார்.
இதில் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இது அதிகாரப் பகிர்வு சுமுகமாக நடப்பதை குறிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த காலை சிற்றுண்டி கூட்டத்தின்போது, முதல்வர் பதவியிலிருந்து விலக போவதாக, சக அமைச்சர்களிடம் அதிகாரப்பூர்வமாக சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, அடுத்த முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முதல்வர் சித்தராமையாவை கட்டியணைத்து பின், கால்களை தொட்டு வணங்கியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சித்தராமையாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்ததாக உள் துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, மதிய உணவுக்கு பிறகு முதல்வர் சித்தராமையா, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பிக்க அனுமதி கோரியிருந்தார். இதையொட்டி, பெங்களூருவில் உள்ள டி.கே.சிவகுமாரின் இல்லம் மற்றும் முதல்வரின் இல்லத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சித்தராமையா ராஜினாமா செய்யும் பட்சத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும். இதில் டி.கே.சிவகுமார் முறைப்படி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதைத் தொடர்ந்து அவர், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். டெல்லி மேலிட தகவல்களின்படி, டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எனது ராஜினாமாவை ஆளுநர் ஏற்க வேண்டும். கட்சி தலைமை உத்தரவை ஏற்று ராஜினாமா செய்தார். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ஏற்கெனவே கூறியுள்ளேன்.
