×

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்களின் தாமத வருகையால், சான்றிதழ் வாங்க வரும் மக்கள், நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் அரசு இ-சேவை மையம் உள்ளது. இங்கு ஆரம்பாக்கம், பாலவாக்கம், நெல்வாய், எளாவூர், ரெட்டம்பேடு, புதுவாயல், பெருவாயல், செதில்பாக்கம், மாதர்பாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள், தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பட்டா பெறுதல் உள்பட பல்வேறு ஆவணங்களை பதிவு செய்ய தினமும் வந்து செல்கின்றனர்.

ஆனால், இ-சேவை மையத்தின் ஊழியர்கள் தினமும் மிக தாமதமாக வேலைக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆதார் பதிவு செய்தல், புதுப்பித்தல் உள்பட பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் கால் கடுக்க பொதுமக்கள் நின்று அவதிப்படுவதாக புகார் கூறுகினற்னர். மேலும், மையத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் ஊழியர்கள் நீண்ட நேரம் எடுத்து கொள்கின்றனர். சில நேரங்களில், டீ குடிக்க வெளியே சென்று சுமார் அரை மணிநேரம் தாமதமாக வருகின்றனர். இதனால், குழந்தைகளை வீட்டில் விட்டு வரும் பெண்கள், வேலை செய்யும் இடத்தில் அனுமதி கேட்டு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த இ-சேவை மையப் பணிகளை வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Gummidipoondi ,Governor's Office ,
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...