×

புதுச்சேரியில் ஓராண்டுக்குபின் முழுநேரம் செயல்பட்ட பள்ளிகள் கவர்னர் தமிழிசை மீண்டும் ஆய்வு

புதுச்சேரி,  மார்ச் 4: புதுச்சேரியில் ஓராண்டுக்குபின் பள்ளிகள் முழுநேர  செயல்பாட்டிற்கு வந்தன. இதனால் பள்ளியிலேயே மாணவர்கள் மதிய உணவை  அருந்தினர். இதனிடையே அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கவர்னர்  தமிழிசை ஆய்வு செய்தார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 23ம்தேதி முழு  ஊரடங்குக்கு பின் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு  ஜன.4ம் தேதிக்குபின் அரசு, நிதியுதவிபெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும்  திறக்கப்பட்டன. 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அரை நாள் மட்டுமே பள்ளிகள்  இயங்கிய நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாமல் இருந்தது. இதனால்  ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மதிய  உணவு மட்டுமின்றி மாணவர்களுக்கான இலவச பேருந்து வசதியையும் உடனே  செயல்படுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

 இதனிடையே  புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அரசு பள்ளி  மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்  நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கி வைத்து பள்ளிகளை ஆய்வு செய்தார்.  வட்டார சமையல் கூடத்தையும் அவர் பார்வையிட்டு தூய்மையாக வைத்திருக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இந்த நிலையில் கல்வித்துறை  அறிவிப்பிற்கிணங்க ஓராண்டுக்கு பின்னர் புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று முதல் முழுநேரமாக செயல்படத் தொடங்கின.  தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மதிய உணவு, ஸ்நாக்ஸ், தண்ணீர்  பாட்டில்கள் அடங்கிய லஞ்ச் பேக்குகளை
எடுத்துச் சென்றனர். அதிக  மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள், இடவசதி குறைபாடு காரணமாகவும்,  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் 2 பேட்ஜ்களாக பிரித்து ஒருநாள்விட்டு  ஒருநாள் பள்ளிக்கு வர அறிவுறுத்தி உள்ளன.

 இதனிடையே புதுச்சேரி,  நீடராஜப்பர் வீதியிலுள்ள சவரிராயலு அரசு ஆரம்ப பள்ளி மற்றும் லப்போர்த்  வீதியிலுள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 2ம் நாளாக  நேற்று ஆய்வுக்கு சென்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்களுக்கு காலை  சிற்றுண்டியான பால் வழங்கி
அறிவுரை கூறினார். மேலும் அவர்களுடன்  கவர்னரும் பாலை அருந்தி அதன் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுடன்  சிறிதுநேரம் கலந்துரையாடினார். கவர்னரின் ஆலோசகர்கள்  சந்திரமவுலி, மகேஸ்வரி, கவர்னரின் சிறப்பு செயலர் சுந்தரேசன் மற்றும்  கல்வித்துறை அதிகாரிகள்
உடனிருந்தனர்.

Tags : Governor ,Pondicherry ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...