திருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட வசந்த நகர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு மட்டுமன்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து வசந்த நகர் தெரு வழியாக வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வசந்த நகர் சந்திப்பில் மழைநீர் கால்வாயையொட்டி மின்சார பில்லர் உள்ளது. இந்த பில்லர் அருகே மழைநீர் கால்வாய் உடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இந்த கால்வாய் பள்ளத்தில் சிக்கி நின்று விடுவதோடு நடந்து செல்பவர்களும் கால்வாய் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.

அதுமட்டுமின்றி மின்சார பில்லரும் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மழைநீர் கால்வாய் போதிய தரமில்லாமல் அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பழுதடைந்து உடைந்து திறந்து கிடக்கும் இந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எந்த நேரத்திலும் இந்த பழுதடைந்த கால்வாய் பள்ளத்தில் விழுந்து பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இனியாவது இந்த பழுதடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More