×

1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கள நாயகியம்மன் கோயில் தேரோட்டம்

 

மங்கலம்பேட்டை, மே 28: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் 1700 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த மங்களநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு கடந்த 12ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. இதனிடையே 23ம் தேதி பள்ளிப்பட்டு, ரூபநாராயண நல்லூர் வழியாக கோ.பூவனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அம்மன் சென்று வருதல், 24ம் தேதி காலை கர்ணத்தம் கிராமத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று வருதல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9வது நாளான நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மகிஷ வாகனத்தில் எழுந்தருள மேளதாள வாத்தியங்களுடன் திருத்தேர் வீதியுலா நடைபெற்றது. தேரடியில் இருந்து புறப்பட்ட தேரானது கடைவீதி, கர்ணத்தம் சாலை வழியாக கோயிலை சென்றடைந்து. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக, மங்களநாயகி அம்மன் கோயிலின் முன்புறம் உள்ள பலி பீடத்தில் ஆடுகள் மற்றும் ஒரு எருமைக் கிடா வெட்டி அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முக சுந்தரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஜெயம் ஃபவுண்டேஷன் சார்பாக 2000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை முகாசாபரூர் ஆதீன பரம்பரை அறங்காவலர் ஜமீன் வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயர், அரண்மனை குடும்பத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இன்று (28ம் தேதி) மஞ்சள் நீராடுதலும், நாளை (29ம் தேதி) விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

 

Tags : Mangala Nayakiyamman ,Temple ,Terotam ,Mangalampetta ,Mangalanayaki Amman Temple ,Cuddalore district ,Mangalampet ,Vikashib Festival ,Ikoil ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...