×

மன்னார்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு கண்டித்து போராட்டம்

மன்னார்குடி, மார்ச் 4: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடு களை கண்டித்து மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், டவுன் எஸ்ஐ முருகன் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மன்னார்குடி அலகு துணை மேலாளர் ஜேக்கப் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவை யான சாக்குகளை வழங்கி தேங்கி கிடக்கும் நெல்மணிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என துணைமேலாளர் ஜேக்கப் கொடுத்த உறுதியை ஏற்ற விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலை ந்து சென்றனர்.


இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் கூறுகையில், பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்வது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளுக்கு தேவையான சாக்குகளை கொடுக்காமல் இடைத்தரகர்கள் மூலம் கொண்டு வரப்படும் நெல்லுக்கு சாக்குகள் வழங்கப்படுவது ஏற்புடையதல்ல. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இப்பிரச்னையில் தலையிட்டு உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்து நேரடி கள ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Mannargudi ,
× RELATED மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி