×

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதில் சந்தேகமா தேர்தல் அலுவலரின் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தல்

தஞ்சை, மார்ச் 4: தஞ்சை கோட்டாட்டசியர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கோவிந்தராவ் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கினார்.
தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பறையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்த மாவட்ட தேர்தல் அலுவலர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் யாருக்காவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சந்தேகம் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தை அணுகலாம்.

அவர்களுக்கு செயல் விளக்கம் அளிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளது. இதேபோல பல்வேறு பயிற்சிகளில் கலந்து கொள்கிற அனைத்து அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமான அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்று இயந்திரங்களும் இருப்பில் உள்ளன. மாவட்டத்தில் சரிபார்ப்பு பணிகள் முடிந்த பிறகு நல்ல நிலையில் 4987 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3592 கட்டுப்பாட்டு கருவிகளும், 3922 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் உள்ளன. இவற்றில் 5 சதவீத இயந்திரங்கள் பயிற்சிக்காக அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அனைத்து தொகுதிகளிலும் உள்ள தலைவர்களின் உருவங்கள் 90 சதவீதம் மறைக்கப்பட்டுள்ளன. ஏதாவது புகார்கள் வந்தால் அதை உடனடியாக கள அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்துக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் இனிமேல் வருவார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருமான வரித் துறையுடன் இணைந்து கண்காணித்து வருகிறோம். எங்கேயாவது சந்தேகப்படும்படியாகவும், பெரிய அளவிலும் பண பரிவர்த்தனை நடந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண்.1950க்கு தகவல் அளிக்கலாம். தவிர ஒவ்வொரு தொகுதியிலும் உதவி செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது குறிப்பிடும்படியான புகார்களை தெரிவித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையமான குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கோவிந்தராவ் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும் குந்தவை நாச்சியார் கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல அலுவலர் உமா மகேஸ்வரி, தஞ்சை ஆர்.டி.ஓ.வேலுமணி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருவிடைமருதூர் கமலகண்ணன், ஒரத்தநாடு பழனிவேல், திருவையாறு மஞ்சுளா, வாக்குப்பதிவு இயந்திரம் மேலாண்மை அலுவலர் சுப்பையா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மாவட்டத்தில் 102 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த வாக்குச்சாவடிகளில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் மீண்டும் பிரச்னை வராத அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

Tags : Officer ,Assembly ,elections ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...